சேலம் மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி பெற ஒரே மைதானமாக திகழ்வது காந்தி மைதானம். சுதந்திர, குடியரசு தினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முக்கிய அரசு நிகழ்ச்சிகள் இங்கு தான் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அமர இரண்டு கேலரிகளுடன் உள்ள இந்த மைதானம் விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் புதிதாக 20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக சேலம் உருக்காலை வளாகம், சேலம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் ஏற்காடு அடிவாரம் என மூன்று இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் மண்டல அளவிலான நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக நடைபெறும் வளர்ச்சி பணிகள் சார்ந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பயன்பாட்டில் இல்லாத சேலம் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தை ஆய்வு செய்தார்.
பிறகு, புதிய விளையாட்டு அரங்கம் அமைக்க சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான போதுமான இடம் இல்லாத காரணத்தால், 31 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் நூற்பாலை வளாகத்தை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்து, அனுமதி கேட்டு சேலம் மாநகராட்ச்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் புதிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக மைதானம் அமையவுள்ள இடத்தின் சேட்டிலைட் படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படியேனும் சேலத்தில் புதிதாக சர்வ வசதிகளும் கொண்ட மைதானம் வரும் பட்சத்தில், சேலத்திலிருந்து மேலும் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உருவாக வாய்ப்புள்ளது.

Leave a comment