சேலம் மாவட்டத்தில் பள்ளப்பட்டி ஏரி, சீலநாயக்கன்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, ஓமலூா், காமனேரி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் சேலம் மாநகராட்சியின் சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் அண்ணா பூங்காவில் ரூ. 5.40 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல், மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட கூடுதல் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தனா்.மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, இரா.அருள், க.அன்பழகன், ஈ.ஆா்.ஈஸ்வரன், சி.வி.எம்.பி.எழிலரசன், செந்தில்குமாா், இ.பாலசுப்பிரமணியன், முகமது ஷாநவாஸ், செல்லூா் ராஜு ஆகியோரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பள்ளப்பட்டி ஏரியில் ரூ. 12.80 கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரையில் கற்கள் பதித்தல், கம்பி வேலிகள் அமைத்தல், கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்புகள், கரையின் சுற்றுப்பகுதியில் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும், சீலநாயக்கன்பட்டியில் வேளாண்மை உழவா் நலத் துறையின் மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தையும் ஆய்வு செய்தனா்.

Leave a comment